சென்னை,
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. வனத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பராமரித்தல், பெண்மையைப் போற்றுதல் மற்றும் நாட்டுப்பற்றை உணர்த்துதல் உள்பட ஆறு கருத்துக்களை மையமாக வைத்து கண்காட்சி நடத்தப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, கேரள உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆன்மிக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் ரதங்களும் கொண்டுவரப்பட்டு இருந்தன.
கண்காட்சி நிறைவு நாளான நேற்று சுற்றுச்சூழலை பேணி காக்கும் வகையில் கஜ, கோ மற்றும் துளசி வந்தனம் நிகழ்ச்சி நடந்தது.
துளசி செடிகளுக்கு பூஜை
இதில் கே.கே.நகர், தியாகராயநகர், சிறுசேரியில் உள்ள பத்மா ஷோத்திரி பள்ளி மாணவர்கள் பங்கேற்று பசுக்கள், கன்றுகள் மற்றும் துளசி செடிகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து சுற்றுச்சூழலை பேணி காப்பது தொடர்பாக குருநானக் கல்லூரி ஊடகவியல் துறை மாணவர்கள் தயாரித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
கண்காட்சியில் உள்ள அரங்குகளை தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சாமிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அப்பன்பரகால ராமானுஜ எம்பார் ஜீயர், வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர், மத் அழகிய சிங்கர் அகோபில மடம் ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் ஜீயர், காஞ்சீபுரம் ஸ்ரீ வாடிகிரி அழகிய மணவாள ஜீயர், ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் கோட்டை சடகோப ராமானுஜ ஜீயர், ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் சாமிகள் மற்றும் வைணவ அறிஞர்கள் அனந்த பத்மானசாரியார், கிருஷ்ணமாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
திருக்கல்யாண நிகழ்ச்சி
தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் எழுந்தருளினார். தொடர்ந்து திருமலையில் இருந்து வந்திருந்தவர்கள் யாகம் வளர்த்து, சாமிக்கு காப்பு அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.
5 லட்சம் பேர் பார்வையிட்டனர்
இதுகுறித்து இந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை அறங் காவலர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது:-
ஆன்மிகம் என்பது அனைத்து மதம், வாழ்க்கை முறை, வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை உருவாக்குகிறது. சுய ஜாதி பற்று, பிற ஜாதி நட்பு என்ற கொள்கையை அனைவரும் பின்பற்ற இந்த கண்காட்சி பயன்பட்டுள்ளது.
பெற்றோர்களையும், பெரியோர்களையும், ஆசிரியர்களையும் எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள் இந்த கண்காட்சி வாயிலாக அடைந்து உள்ளனர். இந்த கண்காட்சியை மொத்தம் 5 லட்சம் பேர் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் உள்ள கூஸ்டன் நகரில் இந்து ஆன்மிக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் அகில உலக அமைப்புகளுடன், இந்தியாவில் உள்ள பல்வேறு ஆன்மிக அமைப்புகளும் கலந்து கொள்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.