தமிழக செய்திகள்

2026 தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் - அண்ணாமலை

திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவேண்டுமென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசார பயணத்தை தொடங்குகிறார். அதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது;

இன்றைய தினம் மாலை, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலுடன், தமிழக பாஜக மாநில தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் துவங்கியிருக்கும் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" என்ற மாபெரும் மக்கள் சந்திப்பு பயணத்தின் துவக்க விழாவில் பங்கேற்று உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் திமுக அரசு இறுமாப்போடு அமர்ந்து கொண்டிருக்கிறது. பணத்தை வைத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற இறுமாப்பு. ஆனால், திமுகவினர் கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்துகொண்டு கல்லெறிந்து கொண்டு இருக்கிறார்கள். தனது குடும்பத்தின் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்று ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் கூட தெரியும்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 88 பேர் கள்ளசாராயத்தால் உயிரிழந்துள்ளனர். கரூரில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?உண்மை என்னவென்றால், கரூரில் 100 காவலர்கள் கூட பாதுகாப்பிற்காக இல்லை. ஆனால், நேற்று பகுஜன் சமாஜ் கட்சி கொலைவழக்கில் முதல் குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு 6 துணை ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 42 காவல் ஆய்வாளர்கள், 87 துணை ஆய்வாளர்கள் உட்பட 1,100 காவலர்களை அனுப்பியது திமுக அரசு. இதிலிருந்தே, திமுக அரசின் அக்கறை எங்கே இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும். இப்படிப்பட்ட திமுக ஆட்சி 2026 தேர்தலில் அகற்றப்படவேண்டும். அதற்காக பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டனும் கடுமையாக உழைக்கவேண்டும்.

 இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.