கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டி கிராமத்தில் புனித கித்தேரியம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து கே.கே.பட்டி பங்குத்தந்தை ஆரோ சேசுராஜ் தலைமையில் சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இரவு அலங்கார தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில், புனித கித்தேரியம்மாள் மற்றும் தெய்வங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பவனி வந்தன. இதில் சாதி, மத, இன பாகுபாடின்றி ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கண் கவர் வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.