தமிழக செய்திகள்

இல்லத்தரசிகளின் பணியை மற்ற தொழிலாளர்களின் உழைப்புடன் எப்படி ஒப்பிட முடியும்? - ஐகோர்ட்டு கேள்வி

அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் வாழ்ந்து குடும்பத்திற்காக கால நேரம் பார்க்காமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பணியை மற்ற தொழிலாளர்களின் உழைப்புடன் எப்படி ஒப்பிட முடியும்? என்று விபத்து வழக்கில் இழப்பீடு நிர்ணயம் செய்த கீழ்க்கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சேலம் மாவட்டம், பெரியவீராணம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 39). கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி பெரியவீராணம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவர் மீது, தனியார் பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரால் நடக்க முடியவில்லை. இதையடுத்து அவர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் வாகன விபத்துக்களை விசாரிக்கும் தீர்ப்பாயம், இல்லத்தரசியான புவனேஸ்வரிக்கு மாதம் ரூ.4,500 வருமானம் பெறக்கூடிய தகுதியானவர் என்று நிர்ணயம் செய்து, அதனடிப்படையில் ரூ.8.46 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் புவனேஸ்வரி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் தனது குடும்பத்தை பாதுகாத்து வரும் இல்லத்தரசி ஆவார். அவருக்கு கணவரும் குழந்தைகளும் உள்ளனர். விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் மற்றவர் துணையில்லாமல் இனி தனது தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் இல்லத்தரசியின் பணி மகத்துவமானது.

நேரம் காலம் இல்லாமல் எந்நேரமும் குடும்பத்திற்காக உழைக்க கூடியவர்கள். அதுமட்டுமல்ல தேசத்தை கட்டிக்காக்கும் வாரிசுகளை உருவாக்கும் உன்னத பணியையும் செய்கின்றனர். இல்லத்தரசிகளுக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை.

வீட்டில் மிகவும் முக்கியமாக கருதப்படும் இல்லத்தரசி மறைந்துவிட்டால் அந்த குடும்பம் திக்குத்தெரியாத நிலைக்கு சென்றுவிடும். குடும்பமே அஸ்தமனமாகிவிடும். அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் வாழ்ந்து குடும்பத்திற்காக கால நேரம் பார்க்காமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பணியை மற்ற தொழிலாளர்களின் உழைப்புடன் எப்படி ஒப்பிட முடியும்? தனது நலத்தையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தினரை கவனிக்கும் இல்லத்தரசியின் பணியை எந்த தொழிலாளரின் பணியுடனும் ஒப்பிட முடியாது.

இந்த உண்மையை தீர்ப்பாயம் கவனிக்க தவறிவிட்டதுடன் தவறான கணக்கீடு அணுகுமுறையில் இல்லத்தரசிக்கு மாத ஊதியத்தை நிர்ணயம் செய்துள்ளது. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு மாற்றம் செய்யப்படுகிறது. மனுதாரரின் மாத வருமானமாக ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் இழப்பீட்டுத்தொகையை ரூ.14 லட்சத்து 7 ஆயிரமாக உயர்த்துகிறேன். இந்த தொகையை பஸ் காப்பீடு செய்துள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன் 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு