சென்னை,
மருத்துவ படிப்புக்கான பொது பிரிவு கலந்தாய்வு வருகிற 30-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. அந்த கலந்தாய்வில் மாணவர்கள் எப்படி கலந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரம் வருமாறு:-
* www.tnmedicalselection.net என்ற இணையதளத்துக்கு சென்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது இருந்த பாஸ்வேர்டை ரீசெட்' செய்யவேண்டும். அதற்கு மாணவர்கள் அப்போது கொடுத்த செல்போன் எண்ணை பதிவு செய்யவேண்டும். அந்த எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை பதிவு செய்த பிறகு, மீண்டும் புதிய பாஸ்வேர்டை உருவாக்கி சப்மிட்' செய்ய வேண்டும்.
* அதன் பிறகு லாக்கின் செய்து அதில் மின்னஞ்சல் முகவரி, விண்ணப்ப எண் ஆகியவற்றை பதிவு செய்து, புதியதாக உருவாக்கிய பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும். அதையடுத்து மாணவர்களின் சுயவிவரங்கள் வரும். அதை சரிபார்த்து கொள்ள வேண்டும். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தங்கள் மாவட்டத்துக்கு அருகில் இருக்கும் 3 மையங்களை தேர்வு செய்ய வேண்டும்.
* அதன்பிறகு கலந்தாய்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதும் கலந்தாய்வுக்கான பதிவு நிறைவுபெறும். அதனைத்தொடர்ந்து அவ்வப்போது இணையதளத்தில் சென்று லாக்கின் செய்து கலந்தாய்வுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்வது தொடர்பாக அறிவிப்பு வந்து இருக்கிறதா? என பார்க்கவேண்டும். அவ்வாறு வந்ததும் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்.
* ஒரு மாணவர் தரவரிசை, சமூக அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட எவ்வளவு இடங்களை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். தாங்கள் செய்த பதிவுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளலாம். அதன்பிறகு லாக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனைப் பதிவுசெய்ததும் லாக் மை சாய்ஸ்' என்ற பட்டனை கிளிக்' செய்யவேண்டும். தாங்கள் செய்த பதிவுகளை மாணவர்கள் பிரிண்ட் அவுட்' எடுத்தும் வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு இறுதி முடிவு வெளியிடப்படும்.