தமிழக செய்திகள்

தமிழகத்தில் தனிநபர் எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது? - ஐகோர்ட்டு கேள்வி

தமிழகத்தில் தனிநபர் எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கடப்பாக்கம் குப்புசாமி. இவர் மீன்பிடி வலை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது இளைய மகன் சதீஷ்குமார், தொழிற்சாலை உள்ளிட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி கூறி, குப்புசாமியை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து, சூனாம்பேடு போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால், போலீசார் சதீஷ்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு, சொத்துகளை அவர் பெயரில் தான் எழுதி வைக்க வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இதனால், குப்புசாமி சென்னையில் வக்கீலை பார்க்க போவதாக கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை தேடி கண்டுபிடித்து ஆஜர்படுத்தகோரி குப்புசாமியின் தம்பி பக்தவச்சலம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து தகவல் கிடைத்து குப்புசாமி நேரில் ஆஜரானார். அதேநேரம், சூனாம்பேடு போலீசார் ஆஜராகவில்லை.

நீதிபதிகள் நடத்திய விசாரணையின்போது குப்புசாமி அழுதபடி, என் இளைய மகன் சதீஷ்குமார் ரவுடியாகி விட்டான். அவனுக்கு ஆதரவாக தான் உள்ளூர் போலீசார் செயல்படுகின்றனர். என் மகனுக்கு எதிராக புகார் செய்ய சென்றபோது, என் போனை பறித்துக்கொண்டு, என்னை கொலை செய்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் மிரட்டினர். அதனால் திருப்பதி கோவிலில் மொட்டை போட்டு, அங்கேயே தங்கி விட்டேன். இனியும் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. தொழிற்சாலையையும் திறக்க முடியவில்லை. அதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியும், அரசு குற்றவியல் வக்கீல் பிரதாப்குமார் தகவல் தெரிவித்தும், இதுவரை இந்த வழக்கில் சூனாம்பேடு போலீசார் பதில் அளிக்கவில்லை. போலீசார் எந்த அளவுக்கு ஐகோர்ட்டு அனுப்பும் நோட்டீசுக்கு மதிப்பு அளிக்கின்றனர் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் தாரணீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் ஆகியோர் வருகிற 12-ந்தேதி நேரில் ஆஜராகி, இதுகுறித்து விளக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள குப்புசாமிக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், போலீஸ் பாதுகாப்பை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு அவர்கள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் எத்தனை தனி நபருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது?, எத்தனை பேர் ஐகோர்ட்டு உத்தரவின்படி பாதுகாப்பு பெற்றுள்ளனர்?, இந்த தனி நபர்களுக்கு எத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது?, இதுபோன்ற நபர்களுக்கு பாதுகாப்பு தேவையா? என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுத்துள்ளதா?, எத்தனை பேருக்கு பாதுகாப்பு தேவையில்லை? என்று முடிவு செய்து, போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது?.

ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது?. மேலும், இதுபோல பாதுகாப்பை பெற்றவர்களில் சிலர், ஆயுதம் ஏந்திய போலீஸ் துணையுடன் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இது உண்மை என்றால், அதுபோன்ற செயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும், போலீஸ் பாதுகாப்பு பெறுபவர்கள், அதை சமுதாயத்தில் மிகப்பெரிய கவுரவமாக நினைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கும் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை