சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் வேலு, ஏ.கே.மூர்த்தி மற்றும் வக்கீல் கே.பாலு ஆகியோர் சந்தித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தை அளித்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அதன் தொடர்ச்சியாக, இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட வன்னியர் மாணவர்களின் நலனைக் காப்பது குறித்து தாங்கள் ஆலோசனை நடத்தியிருப்பதும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
புள்ளி விவரங்கள் இல்லை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில், வன்னியர்களுக்கான தனி இட ஓதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக கூறப்பட்டிருப்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக, கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பதுதான்.
தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயத்திற்கு, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, சமூக நீதி மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
வெள்ளை அறிக்கை
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் ஒவ்வொரு சமூகத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படி பல முறை கோரியும் அதற்கு எந்த பயனும் இல்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி பணிகள், இரண்டாம் தொகுதி பணிகள், நீதிபதி பணிகள் உள்ளிட்டவற்றிலும், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனடியாக வெளியிட தாங்கள் ஆணையிட வேண்டும்.
அடுத்தகட்டமாக, 1989-ம் ஆண்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவு வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் தொகுத்து வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அதன் மூலம் சமூகநீதி தழைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேட்டி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ஜி.கே.மணி அளித்த பேட்டி வருமாறு:-
10.5 சதவீத இடஒதுக்கீட்டை தள்ளுபடி செய்துள்ள கோர்ட்டின் தீர்ப்பை அதிர்ச்சியாக பார்க்கிறோம். டாக்டர் ராமதாஸ் அளித்த நீண்ட அறிக்கையை முதல்-அமைச்சரிடம் அளித்தோம். முதல்-அமைச்சர் இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதியளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாக பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படும் செயல்கள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அவ்வாறு நடைபெறக்கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலை என்று தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இதே விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசினார்.