புதுப்பேட்டை,
எரிந்த நிலையில் மண்டை ஓடு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோட்லாம்பாக்கம் ஏரியில் நேற்று காலை மனித மண்டை ஓடு, எலும்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எரிந்த நிலையில் கிடந்த மண்டை ஓட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மாந்திரீகம்?
விசாரணையில், கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 42) என்பவர் மண்டை ஓட்டை எரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து, கதவை திறந்து வெளியே வந்தேன். அப்போது வீட்டு வாசலில் கருப்பு மை தடவிய மனித மண்டை ஓடு, எலும்புகள், குங்குமம் தடவிய எலுமிச்சை பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
யாரேனும் எனக்கு மாந்திரீகம் செய்திருக்கிறார்களோ? என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். இதை வேறு யாரேனும் பார்ப்பதற்குள் தீ வைத்து எரித்து விடலாம் என்று நினைத்தேன். அதன்படி மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவற்றை ஏரிக்கு எடுத்துச்சென்றேன். அங்கு அதனை தீயிட்டு எரித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மண்டை ஓடு, எலும்புகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டை ஓட்டை சங்கர் வீட்டின் முன் வைத்து சென்ற மர்ம நபர்கள் யார்?, முன்விரோதம் காரணமாக மாந்திரீகம் செய்து வைத்து சென்றார்களா?, போலீசுக்கு தெரிவிக்காமல் மண்டை ஓட்டை சங்கர் எரித்தது ஏன்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.