பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவர் ஈரோட்டில் தங்கி, அங்குள்ள டெக்ஸ்டைல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருடன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த அன்னப்பன்பேட்டை எடக்குடி கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி (24) என்பவர் பணிபுரிந்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஈரோட்டில் வசித்து வந்த விஜய் தனது மனைவி, குழந்தையுடன் கடந்த 2-ந்தேதி சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஜயலட்சுமி தீக்குளித்து, தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, விஜயலட்சுமியின் தாய் வாசுகி (60) பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகளிடம், விஜய் மற்றும் அவரது தாய் வாலாம்பாள் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், சாதி பெயரை குறிப்பிட்டும் திட்டியதாக கூறியிருந்தார். அதன்பேரில், விஜய், வாலாம்பாள்(48) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.