நாகப்பட்டினம்,
நாகை அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 55). இவர், நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி ராஜலட்சுமி(50), நேற்று காலை பாத்திரம் கழுவுவதற்காக வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை பார்த்த ராஜலட்சுமி, அறுந்து கிடந்த மின்கம்பியை கொல்லை புறத்தைத் விட்டு வெளியே போடுவதற்காக எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
2 பேரும் பரிதாப சாவு
இதனால் ராஜலட்சுமி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த பழனிவேல், கொல்லைப்புறத்துக்கு ஓடி வந்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி ராஜலட்சுமி துடித்துக்கொண்டிருந்ததை பார்த்து மனைவியை காப்பாற்ற வேண்டும் என்கிற பதற்றத்தில் பழனிவேல் மின்கம்பியை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி அருகருகே வசித்து வருகின்றனர்.