சென்னை,
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று பிற்பகல் காலமானார். வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு உயிரிழந்தார். அவருக்கு வயது 101. நல்லகண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மறைந்த தோழர், அய்யா ரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.