பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்றபோது எடுத்த படம். 
தமிழக செய்திகள்

தமிழர்களின் கண்ணீரை துடைக்கும் ஆட்சியை நடத்துவேன்; மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழர்களின் கண்ணீரை துடைக்கும் ஆட்சியை நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தினத்தந்தி

உங்கள் தொகுதியில்...

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் மத்திய மாவட்டம், பள்ளிகொண்டா டோல்கேட் அருகில் கந்தனேரி ஊராட்சியில் நடைபெற்ற, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளை தீர்க்கக் கோரி அளித்த மனுக்களை பெற்றார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நிறைவேற்றி தருவோம்

தி.மு.க. ஆட்சி அமைந்து 100 நாட்களில் மக்களுடைய குறைகளை தீர்ப்பேன் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் மக்களிடம் இருந்து வாங்குகிற மனுக்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் ஒரு தனி வாரியம் நிச்சயமாக உருவாக்கப்படும்.

அந்த துறையின் மூலமாக மாவட்ட ரீதியாக பரிசீலித்து உடனடியாக அதனை நிறைவேற்றி தருகின்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு நான் மீண்டும் மீண்டும் தருவதற்கு காத்திருக்கிறேன். தொகுதி வாரியாக முகாம்கள் அமைத்து இந்த பிரச்சினைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றி தருவோம்.

வாக்குறுதி

அ.தி.மு.க. அரசு செய்யத்தவறிய கடமைகளை தி.மு.க. அரசு நிச்சயமாக செய்து கொடுக்கும். இந்த கடமையை தி.மு.க. அரசு நிறைவேற்றி முடிக்கும். அதை முடிக்கிறபோது தமிழகத்தில் 1 கோடி மக்கள் பிரச்சினைகள் தீரும் அளவிற்கு நிச்சயமாக அமையும் என்று நான் உறுதியோடு குறிப்பிட விரும்புகிறேன். தமிழர்களின் கண்ணீர் துடைக்கும் ஆட்சியை நான் நடத்துவேன் என்ற அந்த உறுதியை தரும் நிகழ்ச்சிதான் இந்த நிகழ்ச்சி.

இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். அதையும் முடித்துக்கொடுத்தார். அந்த வரிசையில் நானும் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

நாடாளுமன்ற தேர்தலின்போது நான் கொடுத்த வாக்குறுதிகளை இன்றைக்கும் நான் மறக்கவில்லை. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று அறிவித்தேன். கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை ரத்து செய்வோம் என்று அறிவித்தேன். அதேபோல விவசாயக் கடனை ரத்து செய்வோம் என்று அறிவித்து இருக்கிறேன். மக்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றுவதை தான் தி.மு.க. அரசு செய்யும்.

நம்பிக்கை

மக்களின் அரசாக - மக்கள் விரும்பும் அரசாக - மக்கள் கவலைகளை போக்கும் அரசாக - தி.மு.க. அரசு அமையும். இந்த அரசாங்கம் தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கொண்டுவந்த பாரங்களை, இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்.

தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளீர்கள். உங்கள் கவலைகள் யாவும் தீரும்! என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது