சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான 3 வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, ஒரு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், மற்றொரு வழக்கை சிவகாஞ்சி போலீஸ் விசாரணைக்கு மாற்றியும், மற்றொரு வழக்கில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
ஆனால், சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளில் தனி நீதிபதி விசாரித்து தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார், வெவ்வேறு அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப்படுவதாலும், வெவ்வேறு அமர்வுகள் உத்தரவுகளை பிறப்பிப்பதாலும் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.