ஜாமீன் மனுக்கள்
கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை என கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீது பல்வேறு கேள்விகளை ஏற்கனவே ஐகோர்ட்டு எழுப்பி இருந்தது. இந்தநிலையில் அந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 50 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்தால் அந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்றப்படும் என்றார்.
என்ஜினீயரிங் பட்டதாரிகள்
அதற்கு நீதிபதி, ஏற்கனவே 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தாலே அந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது இதை 50 கிலோ என அதிகரித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.பின்னர், போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு போதிய போலீசாரை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறையினர் பலர் என்ஜினீயரிங் பட்டதாரிகளாக உள்ளனர். அவர்களை இதுபோன்ற சிறப்புப்பிரிவுகளில் பணியமர்த்தினால், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் கையாண்டு விரைவாக குற்றவாளிகளை பிடிக்க வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், கஞ்சா வழக்கு என்றாலே, அது பெரும்பாலும் பொய் வழக்கு தான் என்ற எண்ணம் பலரது மனதில் ஏற்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். நிரபராதிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் இந்த கோர்ட்டு கவனம் செலுத்துகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் எடுத்த நடவடிக்கையின் பேரில் எவ்வளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? அவை எங்கு வைக்கப்பட்டு, எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? உள்ளிட்ட விவரங்களை வழக்கு எண்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.