சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொங்கல் விடுமுறையை ரத்து செய்து, தமிழர்களின் மனதில் நீங்காத கோபத்திற்குள்ளான பா.ஜ.க. அரசு, இப்போது பொங்கல் திருநாள் நேரத்தில் இப்படியொரு உரையாற்றும் நிகழ்ச்சியை பிரதமர் மூலம் ஏற்பாடு செய்து, அதைத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு மூலம் கெடுபிடி செய்து ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குரியது.
பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும், மனமகிழ்ச்சியையும் கெடுக்கும் உள்நோக்கத்தில் இருந்து இன்னும் பா.ஜ.க. அரசு விடுபடவில்லை என்பதும் அதற்கு இங்குள்ள அ.தி.மு.க. அரசும், எல்லாவற்றுக்கும் தலை ஆட்டுவதைப்போல, இதற்கும் துணை போவதும் வெட்கக்கேடானது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும் பா.ஜ.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாகி இப்படி மாணவ - மாணவிகள் மத்தியில் கல்வியைக் காவி மயமாக்கவும், தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்கவும் வழிவகுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை யாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அதிலும், இந்த உரையைக் கேட்பதற்காக பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் மற்றும் இன்வெர்ட்டர்கள் மூலம் மின்னூட்டம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருப்பது, பா.ஜ.க.வின் பிரசாரத்திற்காக அரசுப் பணத்தைச் செலவழிப்பது உட்பட, எதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது என்பது தெரியவருகிறது.
அரசுத் தேர்வுகள் குறித்துத்தான் பிரதமர் உரை நிகழ்த்துகிறார் என்றால் அதை மாணவ - மாணவிகள் கேட்பதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறையே கூறியிருப்பது போல், தகவல் தொழில் நுட்பத்தில் நேரலைத் தளங்கள் இருக்கின்றன. அவற்றை மாணவ, மாணவிகள் விரும்பினால் தங்களின் இல்லங்களில் இருந்தே பார்த்துக்கொள்ள முடியும். அதற்காக அவர்கள் பொங்கல் விழாவை விட்டுவிட்டு, பள்ளிக்கு வர வேண்டியதில்லை. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் இந்த உத்தரவு பா.ஜ.க.வின் பிரசாரத்திற்காக பள்ளிக்கூடங்களைப் பயன்படுத்தவும், இளைஞர்களின் உள்ளங்களைத் திசைதிருப்பும் எண்ணத்துடனும் போடப்பட்டுள்ள உத்தரவாகும்.
ஆகவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகள் 16-1-2020 அன்று பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற நிர்வாக நடைமுறைகளுக்கு எதிரான உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இல்லையென்றால் தி.மு.க. மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனவரி 16-ந் தேதி பொங்கல் விடுமுறை நாளன்று, பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார் என்றும், அவரது உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. பொங்கல் திருநாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலும், பிரதமர் மோடியின் உரை மீது அவர்களால் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைதான் ஏற்படும்.
ஆகவே, மாணவர்கள் தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பள்ளி கல்வித்துறை தனது உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.