சென்னை,
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நமக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
பதில்:- நேற்று (நேற்று முன்தினம்) இது தொடர்பாக அந்த துறையினுடைய மந்திரிக்கு நினைவூட்டி கடிதமும் எழுதி இருக்கிறோம். அதில் பதில் இருக்கிறது.
கேள்வி:- கடந்த ஆட்சியில் குடிமராமத்து திட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். அந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா?
பதில்:- அதுதொடர்பாக பலமுறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வையுங்கள், எங்கே வேலை நடக்கிறது? எவ்வளவு வேலை முடிந்திருக்கிறது? என்று பலமுறை கேட்டும், ஒருமுறை கூட அவர்கள் முறையான பதில் தரவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதனுடைய விவரங்கள் எல்லாம் சேகரித்து நாங்களே தெரிவிக்கின்றோம்.
கேள்வி:- கொரோனா 2-வது அலையை நீங்கள் ஒருமாத காலத்திலேயே கட்டுப்படுத்திவிட்டீர்கள். இப்போது பாதிக்கப்பட்டவர்களை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?
பதில்:- கொரோனாவை பொறுத்தவரைக்கும் இப்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருக்கிறது. இல்லை என்று மறுக்கவில்லை. அதையும் படிப்படியாக குறைப்பதற்கான முயற்சிகளில் அரசு முழுமையாக ஈடுபட்டு இருக்கிறது. தினசரி தொற்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது 36 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. அது 60 ஆயிரத்தை தொடும் என்ற சூழ்நிலை இருந்தது. அதனால் தான் நாங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டோம். இப்போது அது படிப்படியாக குறைந்து நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) 16 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்திருக்கிறது.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரைக்கும் 7 ஆயிரமாக இருந்தது, இப்போது ஆயிரமாகியிருக்கிறது. அதேபோல கோவையை பொறுத்தவரைக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 5 ஆயிரத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. இப்போது அங்கே 2 ஆயிரமாகியிருக்கிறது. சேலத்தில் 1,500 ஆக இருந்தது, 900 ஆகி இருக்கிறது. அதுமட்டுமல்ல படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, இது எல்லாம் இருந்துகொண்டு இருந்தது. அதை எல்லாம் நிவர்த்தி செய்து பிரச்சினை இல்லாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். போதுமான அளவுக்கு படுக்கை, ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம்.
சென்னையில் கொரோனா கட்டளை மையம் உருவாக்கி இருக்கிறோம். அதில் அதிகபட்சமாக மே 20-ந் தேதியன்று மட்டும் 4 ஆயிரத்து 768 அழைப்புகள் வந்தது. ஆனால் இன்றைய (நேற்று) நிலவரம் 200 முதல் 300 அழைப்புகள்தான் வருகிறது. அந்த அளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம். இன்னும் படிப்படியாக குறைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக குறைப்போம். தடுப்பூசிகளை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு இருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு சில தளர்வுகளை அறிவித்திருக்கிறோம்.
அந்த தளர்வுகளை பொதுமக்கள் மெத்தனமாக எடுத்துக்கொள்ளாமல், அலட்சியப்படுத்தாமல், ஒத்துழைப்பை தர வேண்டும். அவசியம், அவசரம் இல்லாமல், தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும். முக கவசத்தை அணிய வேண்டும். அரசு என்னென்ன வழிமுறைகளை எல்லாம் சொல்லியிருக்கிறதோ அதை எல்லாம் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றால் நிச்சயமாக, முழுமையாக கட்டுப்படுத்தி விடுவோம்.
டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன்?
கேள்வி: டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து....
பதில்:- சில தளர்வுகளை கொடுத்துதான் ஊரடங்கை அமல்படுத்தி கொண்டு இருக்கிறோம். அதுவும் குறிப்பாக மேற்கு மண்டலத்தை பொறுத்தவரைக்கும் அந்த தளர்வு கூட கிடையாது. அதில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறோம். அந்த தளர்வுகள் இல்லாமல் முழு கட்டுப்பாட்டை கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் காரணத்தினால் தான் சில தளர்வுகளை கொடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகளுக்கும் அந்த சலுகைகளை கொடுத்திருக்கிறோம்.
கேள்வி:- உங்களுடைய டெல்லி பயணம் குறித்து கூறுங்கள்..
பதில்:- 17-ந் தேதி பிரதமரை சந்திப்பதற்காக நேரம் கேட்டு இருக்கிறேன். தற்காலிகமாக சொல்லி இருக்கிறார்கள். இன்னும் உறுதிசெய்யவில்லை. உறுதிசெய்தவுடன் சொல்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலினிடம், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்து இப்போதுதான் ஒரு மாதம் ஆகிறது. அதுகுறித்து முழு விவரத்தை அரசு கேட்டு இருக்கிறது. விவரங்கள் வந்த பிறகு அது குறித்து முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.