தேர்தல் 2026

நடிகனை பிடித்தால் விசில் அடிக்கலாம்; நாட்டை கொடுக்க முடியுமா? - நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

இந்த தேர்தல் மூன்று மாடலுக்கான தேர்தல் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சாமி சிலையை திருடும் கும்பலை பார்த்திருப்போம். ஆனால் சாமியை திருடும் கும்பல் தற்போது வந்துள்ளது. இந்த தேர்தல் மூன்று மாடலுக்கான தேர்தல். ஒன்று திராவிட மாடல், 2-வது அடிமை மாடல், 3-வது சினிமா மாடல். திராவிட மாடல் கல்வியை கொடுத்தது. இந்தியாவிலேயே ஒரு மாநிலம் இப்படி இருக்க வேண்டும் என பெருமையை சேர்த்தது. மொழி மானத்தை காப்பாற்றியது.

தற்போது இன மானத்தை காப்பாற்ற போராடுகிறது. அடிமை மாடல் என்பது நமது தன்மானத்தை, சுயமரியாதையை மோடியிடம் கொடுப்பது. மக்கள்தொகையை வைத்து எம்.பி.க்களை அதிகமாக்கும் திட்டத்தை தேர்தல் நேரத்தில் கொண்டுவரும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதை பார்த்து எடப் பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கூட்டணி கட்சியினர் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர்.

சினிமா மாடல் என்றால் சினிமாவில் டாக்டர் ஆகலாம், என்ஜினீயர் ஆகலாம். ஏன் முதல்-அமைச்சர் கூட ஆகலாம். அரசியலில் வந்த உடனே முதல்-அமைச்சராக முடியுமா? என்னுடைய அளவுக்கு விஜய் அரசியல் பேசி உள்ளாரா?, தமிழக மக்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தபோது, அவர்களுக்காக நின்றதுண்டா?.

சினிமாவில் திறமையை பார்த்து மக்கள் வைத்துள்ள அன்பை, தற்போது அரசியலுக்கு பயன்படுத்துகிறார். நடிகனை பிடித்தால் விசில் அடிக்கலாம், ஆனால் நாட்டை கொடுக்க முடியுமா. இந்த தேர்தல் ஒற்றுமைக்கும், பிரிவினைக்குமான தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.