புதுடெல்லி,
இந்தியாவின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் ஏற்கெனவே பொறியியல் மட்டுமின்றி பயோ டெக்னாலஜி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான பட்டப்படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை உருவாக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. பட்டப் படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒரு நாட்டில் மருத்துவ கருவிகளை சொந்தமாக வடிவமைப்பதற்கு டாக்டர்களும், இன்ஜினியர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இன்ஜினியர்ககளை டாக்டர்களாக மாற்றுவதை விட டாக்டர்களுக்கு பொறியியலில் பயிற்சி அளிப்பதே எளிதான அணுகுமுறையாக இருக்கும். எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலுமே மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஐ.ஐ.டி.-யின் நோக்கம்.
ஏற்கெனவே ஐ.ஐ.டி. கரக்பூர் சொந்தமாக மருத்துவமனை அமைத்து, எம்.டி. படிப்பையும் வழங்கி வருகிறது . அதேபோன்று, சென்னை ஐ.ஐ.டி.-யும் மருத்துவமனையை உருவாக்கி, முறையான அனுமதியுடன் எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. ஆகிய படிப்புகளை வழங்க விரும்புகிறது.
இதற்காக சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தை ஏற்படுத்தி, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NATIONAL MEDICAL COMMISSION) அனுமதியை பெறுவதற்கு சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.
டாக்டர்களும், இன்ஜினியர்களும் இணைந்து புதிய மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும், மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவுகிறது. ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி. மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மூலம் 4 ஆண்டு பி.எஸ். மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது.
உயர்தர மருத்துவ உபகரணங்களுக்கு வெளிநாட்டையே நாம் இன்றும் சார்ந்து இருக்கிறோம். நம் நாட்டிலேயே சொந்தமாக மருத்துவ கருவிகளை வடிவமைக்க, டாக்டர்களும், இன்ஜினியர்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.