தமிழக செய்திகள்

கோர்ட்டு உத்தரவை மீறி கட்டணம் கேட்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை

கோர்ட்டு உத்தரவை மீறி 100 சதவீதம் கட்டணம் கேட்கும் பள்ளிகள் மீதான நடவடிக்கைகளில் எந்தவித சுணக்கமும் இருக்கக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதியில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணையை மீறி 100 சதவீதம் கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பாக பெறப்படும் புகார்களை பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இது சார்பாக பெரும்பாலான முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து, இல்லை என்ற அறிக்கை பெறப்பட்டது. மேலும் ஒருசில முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், ஐகோர்ட்டில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சில உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்தது.

எனவே கோர்ட்டின் உத்தரவை மீறி 100 சதவீதம் கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் தொடர்பான புகாரை பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், பிரத்தியேகமாக ஒரு மின்னஞ்சல் முகவரியை ஆரம்பித்து அதனை பெற்றோரும், பொதுமக்களும் அறியும் வகையில் செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு புகாரில் உண்மையிருப்பின் முதன்மை கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காரணம் காட்டும் அறிவிப்பை தெரிவிக்க வேண்டும். பின்னர், அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் தெரிவித்த விளக்கம், முதன்மை கல்வி அலுவலர் அனுப்பிய அறிவிப்பையும் இந்த இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த வழக்கின் மீதான நடவடிக்கையை ஐகோர்ட்டும், அரசும் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோருவதால், இதில் எவ்வித சுணக்கமும் இருக்கக்கூடாது. இந்த வழக்கு மீண்டும் வருகிற 7-ந்தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. 3-ந்தேதி (இன்று) வரை பெறப்படும் புகார் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கை சார்ந்த விவரங்களை அன்றைய நாளில் தெரிவிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீதும் துரிதமாக நடவடிக்கை எடுத்து அவ்வப்போது இந்த இயக்ககத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை