தமிழக செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; தேனி மருத்துவ கல்லூரி டீன் சி.பி.சி.ஐ.டி. முன் ஆஜர்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தேனி மருத்துவ கல்லூரி டீன் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. முன் ஆஜராகி உள்ளார்.

தேனி,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண் அடிப்படையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் வந்தது. அதன்பேரில் கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டதால், க.விலக்கு போலீஸ் நிலையத்தில், கல்லூரி முதல்வர் புகார் செய்தார். அதன்பேரில், மாணவர் உதித்சூர்யா மீது கடந்த 18-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் உதித்சூர்யா தனது பெற்றோருடன் தலைமறைவாகி விட்டார். அவர்களை பிடிக்க தேனியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு இருந்தனர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி கடந்த 23-ந்தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கும் பணியில் க.விலக்கு போலீசார் ஈடுபட்டனர். முதற்கட்டமாக வழக்கு ஆவணங்கள் அனைத்தும் நகல் எடுக்கப்பட்டு மின்னஞ்சல் மூலம் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதன்தொடர்ச்சியாக வழக்கு தொடர்பான அசல் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி உதித்சூர்யா தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் போது, முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

அத்துடன், மாணவர் உதித்சூர்யா சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சரண் அடைந்தால், முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.

அதேநேரத்தில், மாணவர் உதித்சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தினரை தேனி தனிப்படை போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து தேடி வந்தனர். இந்நிலையில், மாணவர் உதித்சூர்யாவின் குடும்பத்தினர் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஐதராபாத்துக்கு தனிப்படையினர் சென்றனர். இதற்கிடையே நேற்று அவர்கள் திருப்பதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் திருப்பதிக்கு சென்றனர்.

அங்கு மலையடிவாரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் உதித்சூர்யா, அவருடைய தந்தை வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகியோருடன் நின்று கொண்டு இருந்தார். அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்து சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தேனி மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரன் இன்று சி.பி.சி.ஐ.டி. முன் ஆஜராகி உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்