தமிழக செய்திகள்

2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

கர்நாடகத்தின் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் 2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டு குடிநீர் திட்டம்

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ள 2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கர்ஜோல் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதைக் கூட கர்நாடக அரசு எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக மந்திரி சுட்டிக்காட்டியுள்ள சிக்கல்கள் அனைத்தும் ஏற்கனவே தீர்க்கப்பட்டவை. தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீரை வழங்குவதற்கு வசதியாக ஒகேனக்கல் திட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது.

செயல்படுத்த வேண்டும்

2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீரைக் கொண்டு தான் செயல்படுத்தப்படவுள்ளது. இன்னும் கேட்டால் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான தண்ணீர் மேட்டூர் அணையில் அளவிடப்பட்டது. ஆனால், இப்போது பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்டு, அதன் பிறகு தான் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. அதன்படி ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரில் புதுச்சேரிக்கான 7 டி.எம்.சி தவிர மீதமுள்ள நீர் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தமானது. அதைக் கொண்டு 2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் போது அதில் தலையிட கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.

அதனால், 2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல் விலகியிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசும், கர்நாடகத்தின் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் 2-ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு