தமிழக செய்திகள்

போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழ் எழுத்தாளர் களுக்கு ஆண்டுதோறும் ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சீர்மிகு திட்டங்கள்

உலகிலேயே எந்த முதல்-அமைச்சரும் பெற்றிராத பெருமையை கொண்டவர் கருணாநிதி. தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர். சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர். பெரியாரின் சலியாத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜரின் அயராத தொண்டும், அண்ணாவின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர்.

பன்னோக்கு உயர்சிறப்பு ஆஸ்பத்திரி

* கருணாநிதியின் நினைவைப்போற்றும் வகையில், சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.

* புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் கருணாநிதிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப்பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான், 2010-ம் ஆண்டில், அண்ணாவின் 102-வது பிறந்தநாளன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப்பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, 2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் ரூ.70 கோடி செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.

இலக்கிய மாமணி விருது

* தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி' என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

* தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

சேமிப்பு கிடங்குகள்

* திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட கலெக்டரால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்குகள் அமைக்கப்படும்.

மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரியஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூறியவாறு 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்புகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு ரூ.5 ஆயிரம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போது காவல்துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர்.

அவர்களது இன்றியமையாத பணியை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களது பணியை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் 2-ம் நிலைக் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

பூசாரிகளுக்கு நிவாரணம்

இதற்கிடையே கொரோனா காரணமாக கோவில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, கோவில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், கோவில்களில் மாதச்சம்பளம் பெறாமல் பணியாற்றும் கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டார்.

அதன்படி மாதச் சம்பளம் இல்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற புதிய துறை சார்பில் முதற்கட்டமாக பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்பட்ட 1,52,000 மனுக்களில், 57,845 மனுக்கள் மீது உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றிலிருந்து 3,750 மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 54,095 மனுக்கள் மீது தீர்வு காணும் பொரு ட்டு, பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன.

மேற்கண்டவையில் உரிய முறையில் தீர்வு காணப்பட்ட 3,750 கோரிக்கை மனுக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி, வருவாய் துறை - சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் - ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா போன்ற தீர்வு காணப்பட்ட தனிநபர் கோரிக்கைகள் 1,626, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வீடு கட்ட வழங்கப்பட்ட பணி ஆணைகள் 88, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக வழங்கப்பட்ட 26 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணைகள் 548.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பெறப்பட்டு, அடிப்படை வசதிகள் சம்பந்தமாக நிறைவேற்றப்பட்டவை 236. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் சார்பில் குடிநீர் வசதிகள் சம்பந்தமாக நிறைவேற்றப்பட்டவை 261, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் மின் கோரிக்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்டவை - 575. நகராட்சிகள் மற்றும் இதர துறைகள் சார்பில் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக தீர்வு காணப்பட்டவைகள்- 416. மொத்தம் 3,750 கோரிக்கை மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனைப்பட்டா

முழுமையாக தீர்வு காணப்பட்ட 3,750 மனுதாரர்களில் காஞ்சீபுரம் மாவட்டம் செரப்பனஞ்சேரி சேர்ந்த பத்மாவதி இலவச வீட்டுமனைப் பட்டா, காஞ்சீபுரம் ஒரகடத்தைச் சேர்ந்த கன்னிகாவுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ம.முகேஷ் ரூ.1,00,000/-க்கான கல்விக்கடன், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்த ரா.கோவிந்தராஜ் ரூ.2,50,000/- மானியத்துடன் கூடிய ரூ.12,00,000/- மதிப்பீட்டிலான சுயதொழில் கடன் அனுமதி ஆணை.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டாரத்தைச் சேர்ந்த சுதர்சனுக்கு ரூ.2,10,000/-திற்கான பசுமை வீடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு ரூ.2,10,000/- பசுமை வீடு, விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த காந்தியப்பன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையான ரூ.12,00,000/- மதிப்பிலான திறந்தவெளி கிணறு மற்றும் ரூ.41.50 லட்சத்திலான இதர 3 பொது பணிகளுக்கான ஆணைகள், காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த பொது மக்களின் கோரிக்கையான சாலை அமைத்திட ரூ.47,90,000/-திற்கான நிர்வாக அனுமதி ஆணை.

ஆணை வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் செம்பரசணபள்ளி ஊராட்சியை சேர்ந்த முனிகிருஷ்ணப்பாவின் கோரிக்கையான சமுதாயக் கிணறு அமைப்பதற்கு ரூ.12,25,000/-த்திற்கான நிர்வாக அனுமதி ஆணை, விழுப்புரம் மாவட்டம் தடாகம் ஊராட்சியை சேர்ந்த மனோகரின் கோரிக்கையான கழிவுநீர் வாய்க்கால் அமைத்திட ரூ.20,12,000/-த்திற்கான நிர்வாக அனுமதி ஆணை, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த புஷ்பநாதனின் கோரிக்கையான தார்சாலை அமைத்திட ரூ.7,80,000/-திற்கான நிர்வாக அனுமதி ஆணை.

வேலூர் மாவட்டம், கணியம்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த. தினேஷ் கோரிக்கையான கொண்டசமுத்திரம் கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் தேக்கத்தொட்டி அமைத்திட ரூ.22,64,000/-த்திற்கான நிர்வாக அனுமதி ஆணை ஆகிய நலத்திட்டங்களுக்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது