சென்னை,
அண்மையில் சோமாட்டோ நிறுவனம் 'சோமாட்டோ இன்ஸ்டன்ட்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இருந்தாலும் தற்போது வரை இந்த திட்டம் சென்னையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான அவசர கூட்டம் ஒன்று சென்னை போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் இருப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்து காவல்துறை நடத்திய தீவிர கண்காணிப்பில், இன்று ஒருநாள் மட்டும் சென்னையில் ஸ்விக்கி, சோமாட்டோ மற்றும் டன்சோ போன்ற உணவு நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் மீது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக ஸ்விக்கி நிறுவனத்தைச் சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் 450 பேர் மீதும் சோமாட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 278 பேர் மீதும் டன்சோ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 188 பேர் மீதும் மேலும், பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களை சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் 62 பேர் மீதும் என்று மொத்தமாக 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.