சங்கரன்கோவில்,
அனைத்து துறைகளிலும் அ.தி.மு.க. அரசு புரட்சி செய்து வருகிறது என்று சங்கரன்கோவிலில் நடந்த அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் முருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தம்பதியின் மகள் ஹரிணி மற்றும் முருகனின் சகோதரி தெய்வானைசேதுபதி தம்பதியின் மகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நீராட்டு விழா சங்கரன்கோவில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று காலை நடந்தது. அமைச்சர் ராஜலட்சுமி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியை தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, ஹரிணி, அனுசுயா ஆகியோரை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இது நம்ம குடும்ப நிகழ்ச்சியாக நடக்கிறது. அமைச்சர் ராஜலட்சுமியை நமது குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறோம். இவர் சிறந்த முறையில் தன்னுடைய பொறுப்பை கவனிக்க கூடிய திறமைமிக்கவர். நல்ல கல்வி கற்றவர். இதனால் தான் இந்த விழாவுக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வந்துள்ளனர். அ.தி.மு.க. என்றாலே மக்கள் மனதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான் தோன்றுவார்கள். அந்த இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் இன்று வளமோடும், எழுச்சியோடும் இருப்பதற்கு காரணம் உங்களைப் போன்ற தொண்டர்களின் உழைப்பு தான். நீங்கள் ஒரே குடும்பமாக, ஒரே அணியாக இருந்து சிறப்பாக செயல்படுவதே இந்த கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
இன்று ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் கிராமப்புற மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும் இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஏராளமான சலுகைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை இந்த அரசு வழங்கியது. இதனால் ஏராளமான கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கியது அ.தி.மு.க. அரசாகும். இந்த உள் இடஒதுக்கீட்டால் அரசு பள்ளியில் படித்த 313 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில் இருந்து இந்த அரசு ஏழை, எளிய மக்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிராமங்களில் விவசாயம் செழிக்க விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளன. இதன்மூலம் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கல்வியில் புரட்சி, நீர் மேலாண்மை திட்டத்தில் புரட்சி, தொழில் புரட்சி, எங்கும் புரட்சி, எதிலும் புரட்சி என அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் புரட்சிகளை செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, உதயகுமார், பாஸ்கரன், அன்பழகன், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா (நெல்லை), கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா (தென்காசி வடக்கு), செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. (தென்காசி தெற்கு), எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், மனோகரன், கலெக்டர்கள் விஷ்ணு (நெல்லை), சமீரன் (தென்காசி), மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெருமாள், கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நெல்லையில் இருந்து காரில் சங்கரன்கோவிலுக்கு சென்ற முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மானூர், தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், குருக்கள்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
விழா நடந்த மைதானம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மேலும், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சார்பிலும் முதல்அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது
தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி.பிரவின் குமார் அபிநபு ஆகியோர் நேரடி மேற்பார்வையில் 1,310 போலீசார், 3 வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.