தமிழக செய்திகள்

சென்னையில் 3 ஆயிரத்து 964 பேனர்கள் அகற்றம்

சென்னையில் இதுவரை 3 ஆயிரத்து 964 பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேனர்கள் அமைக்க ஐகோர்ட்டு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மற்றும் அச்சக உரிமையாளர்களிடம் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி, அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியதுடன், சட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இதனை மீறி சட்டத்துக்கு புறம்பாக பேனர்கள் வைப்பவர்கள் மீது 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும் எனவும், மாநகராட்சியின் அனுமதியின்றி பேனர்கள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மீது முனிசிபல் சட்டத்தின் கீழ் அச்சக உரிமம் ரத்து செய்யப்பட்டு, சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு விதிமுறைகளை மீறியவர்கள் மீது மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பில் தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் பேனர் சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தை தொடர்ந்து உங்கள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் சாலைகள் மீது சிவப்பு வர்ணம் பூச இன்னும் எத்தனை லிட்டர் மனித ரத்தம் தேவை? என்று ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை கண்காணித்து அகற்ற ஏதுவாக சென்னை மாநகராட்சியும், சென்னை போலீசும் இணைந்து, 1 வட்டாரத்துக்கு ஒரு வாகனம் வீதம், தனி செல்போன் எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அமைக்கப்படும் பேனர் கள் குறித்து, மண்டலம் 1 முதல் 5 வரையிலான வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 9445190205 என்ற செல்போன் எண்ணுக்கும், மண்டலம் 6 முதல் 10 வரையிலான மத்திய வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 9445190698 என்ற எண்ணுக்கும், மண்டலம் 11 முதல் 15 வரையிலான தெற்கு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 9445194802 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, ரோந்து வாகனங்களில் பணியில் உள்ள அதிகாரிகள் உடனடியாக சம்பந்தபட்ட இடத்துக்கு நேரடியாக சென்று பேனர்களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து, அதை வைத்தவர்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்யவேண்டும். பின்னர் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட அந்த பேனர்களை அகற்றி சம்பந்தபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட 3 ஆயிரத்து 964 பேனர்கள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டு, 245 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் ஆர்.லலிதா, துணை கமிஷனர்கள் எம்.கோவிந்தராவ், பி.குமாரவேல் பாண்டியன், எஸ்.திவ்யதர்ஷினி, டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு