சென்னை
தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து வருகின்றனர்.
தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள சிம்சன் பெரியார் சிலை மீது மர்ம நபர் ஒருவர் காலணி வீசினார்.
அவ்வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், திடீரென தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி பெரியார் சிலை மீது வீசி எறிந்தார். பின்னர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். பெரியார் சிலை மீது காலணி வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாசாலையில் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பெரியார் சிலை அவமதிப்பை பல்வேறு தலைவர்கள் கண்டித்து உள்ளனர்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது;-
பெரியார் சிலையை அவமதிப்பது, தமிழக மக்களை அவமதிப்பது போன்றது. இந்த செயலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.