தமிழக செய்திகள்

சென்னையில் ரன்வீர்ஷா நண்பர் வீட்டில் 23 சிலைகள் பறிமுதல் பூமிக்கடியில் புதைக்கப்பட்டு இருந்ததை தோண்டி எடுத்தனர்

தொழில் அதிபர் ரன்வீர்ஷா நண்பர் வீட்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த 23 சிலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தோண்டி எடுத்தனர்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருபவர் ரன்வீர்ஷா. தொழில் அதிபரான இவரது வீட்டில் பழமையான கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் கலைநயமிக்க கல்தூண்கள், பழமையான கோவில் சிலைகள் உள்பட 91 கலைப் பொருட்கள் சிக்கியது.

இதையடுத்து ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் வெளிநாடு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லூக் அவுட் நோட்டீசு அனுப்பப்பட்டது.

கைப்பற்றப்பட்ட சிலைகள், கல்தூண்கள் குறித்து ரன்வீர்ஷாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்துவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் வக்கீல் மூலம் கால அவகாசம் கேட்டார்.

இதற்கிடையே சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் உள்ள ரன்வீர்ஷாவின் தொழில் நண்பரான ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிரண் என்பவரின் விருந்தினர் மாளிகை இல்லத்தில் பூமிக்கடியில் சிலைகள், கல்தூண்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பெண் தொழில் அதிபரான கிரண் இல்லத்தில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். அப்போது பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த கலைநயமிக்க 2 கல்தூண்கள் கண்டெடுக்கப்பட்டது. அங்கு மேலும் சிலைகள், கல்தூண்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமடைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் நேற்று தோண்டும் பணி நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதன்படி கிரணின் விருந்தினர் மாளிகை வளாகம் முழுவதும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டும் பணி நேற்று நடந்தது. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேரடி கண்காணிப்பில் நடைப்பெற்ற சோதனையில் 10 அடி ஆழத்தில் புதையல் போன்று பழமையான கோவில் கற்சிலைகளும், கலைநயமிக்க கல்தூண்களும் அடுத்தடுத்து சிக்கியது. காலையில் ஆரம்பிக்கப்பட்ட சோதனை மாலை 6 மணியளவில் முடிவுக்கு வந்தது.

இந்த சோதனையில் சிக்கிய சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. அசோக் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருந்தினர் மாளிகையில் இன்றைக்கு (நேற்று) நடைபெற்ற சோதனையில் கலைநயமிக்க தூண்கள் உள்பட 23 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை 100 ஆண்டுகள் பழமையான புராதன சிலைகள் ஆகும். கோவில்களில் இருந்து திருடப்பட்டு, இங்கு புதைக்கப்பட்டு இருக்கிறது.

4 அல்லது 5 தினங்களுக்கு முன்பு தான் இந்த சிலைகளை கொண்டு வந்து பூமிக்கடியில் புதைத்து இருக்கிறார்கள்.

இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும். தற்போது இந்த வீட்டில் சோதனை முடிவடைந்துவிட்டது. இந்த சிலைகள் அனைத்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்.

தற்போது வேறு எங்கும் சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தால் அங்கும் சோதனை நடத்தப்பட்டு சிலைகள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரன்வீர்ஷாவின் தொழில் நண்பர் கிரணுக்கு சிலை பதுக்கல் வழக்கில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்