சென்னை,
சென்னை புளியந்தோப்பு நாச்சியம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 16-ந்தேதி இதயகோளாறு காரணமாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்து பரிசோதித்தனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், கடந்த 3-ந்தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
கொல்கத்தாவில் உள்ள அவரது உறவினர்களை பார்த்துவிட்டு சென்னை திரும்பிய நாள் முதல் அந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் புளியந்தோப்பு ஆசீர்வாதபுரம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 42 வயது ஆண் மற்றும் 24 வயது வாலிபர் ஒருவருக்கும், தட்டான்குளம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான 28 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிய 30 வயது பெண் தூய்மை பணியாளருக்கும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றிய 35 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.