சென்னை,
மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, 12-க்கு மேற்பட்ட உயர்மட்ட அளவிலான ஆலோசனை கூட்டங்கள், அதேபோன்று 12 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க வேண்டும், ஒரு சமூகத் தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கொரோனா தொற்று முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரவென்றும், பகலென்றும் பாராமல் தம்முடைய உயிரை துச்சமெனக் கருதி, உயிர் போனாலும் பரவாயில்லை, நம் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற வகையிலே பணியாற்றிக்கொண்டிக்கும் அரசு, அதிகாரிகள் எல்லோரும் ஓர் அணியில் இருந்து அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எங்களைப் பொறுத்தவரை, கொரோனா குறித்து மறைத்து வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. வெளிப்படைத் தன்மையோடு முதல்-அமைச்சரும் சரி, சுகாதாரத்துறையும் சரி, இந்த கொரோனா குறித்த அறிவிப்புகளை தினந்தோறும் ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கொரோனா தடுப்பு விஷயத்தில் முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். ஒரு மாநிலத்திற்கும் மற்ற மாநிலத்துக்கிடையேயான ஏதேனும் பிரச்சினை இருக்கும்பொழுதுதான் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய கூட்டம்தான் நடத்த வேண்டும். மற்றபடி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் நிர்வாகத்திலுள்ள மூத்த அதிகாரிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதை விமர்சிப்பது என்பது ஒரு வேடிக்கையான, விந்தையான ஒன்று, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருப்பது கேலிக்குரிய விஷயமாக இருக்கின்றது.
இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல. மக்களுக்கு செய்யும் பணியில் அரசிற்கு துணையாக இருந்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட மனமில்லாமல் இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பதை மக்கள் எள்ளி நகையாடக்கூடிய விஷயமாகத்தான் பார்க்கிறார்கள்.
டிசம்பர் இறுதி வாரத்தில் சீனாவில் இந்த வைரசை கண்டறிந்தபோது, ஜனவரி மாதத்திலேயே பல்வேறு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளார்.
எந்த புள்ளி விவரங்களையும் மறைக்க வேண்டிய அவசியம், எங்கள் அரசுக்கு இல்லை. கொரோனா வைரஸ் தொற்று நம் மாநிலத்தில் தற்போது 2-ம் கட்டத்தில்தான் உள்ளது. முக்கியமாக 3 விஷயங்கள் பார்க்கப்பட வேண்டும். ஒன்று கண்டறிதல், 2-வது பரிசோதனை, 3-வது சிகிச்சை. இதுதான் முக்கியமானது. சமூகப் பரவல் என்பது இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நிர்வாக கூட்டம் என்பது வேறு, அரசியல் கட்சி கூட்டங்கள் என்பது வேறு. இந்த நேரத்தில், நாங்கள் தலைமைக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி விவாதித்திருந்தால், அது தவறு. முதல்-அமைச்சர் கூட அமைச்சரவை கூட்டங்களை நடத்தும்போது சமூக இடைவெளியை பின்பற்றித்தான் நடத்தி வருகிறார்.
அரசைப் பொறுத்தவரை, முதல்-அமைச்சர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக தமிழகத்தில் சமுதாயப் பரவல் இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.