கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் 10 குறுவட்டங்களுக்கான தடகள போட்டிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் ஓட்டம், நீளம் தாண்டுதல் என ஒவ்வொரு போட்டியிலும் குறுவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அதன் அடிப்படையில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 664 மாணவர்களும், 623 மாணவிகளும் என மொத்தம் 1287 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.