சென்னை,
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் செய்தித்துறை சார்பில் ரூ.1.50 கோடி செலவில் நூலகத்துடன் கூடிய பாரத மாதா நினைவாலயம் மற்றும் பாரத மாதா உருவச் சிலையை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று திறந்து வைத்து, மலா தூவி மாரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன், மாவட்ட கலெக்டர் ச.திவ்யதாசினி, எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரத மாதா நினைவாலயம் வளாகத்தில் அறிவியல், விஞ்ஞானம், மொழி, விளையாட்டு, வேளாண்மை, சிறுகதைகள், தத்துவங்கள் நிறைந்த ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய நூலகக் கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்கள் அனைவரும் பாரத மாதா நினைவாலயத்தை பார்வையிட்டு, இங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாட்டுப்பற்று மற்றும் கல்வி அறிவினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைச்சர் மலர் தூவி மாரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வருகிற 7-ந் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து, அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தில் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டதை பார்வையிட்டார்.