தமிழக செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 349 வீடுகளில் வெள்ளம் புகுந்தது; பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தஞ்சம்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 349 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

காவிரி ஆற்றில் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 349 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே அணையில் இருந்து உபரிநீராக திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது. ஆனால் நேற்று மேலும் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருகரைகளையும் தொட்டபடி அகண்ட காவிரியாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பவானி

இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சிங்கம்பேட்டை, கேசரிமங்கலம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை, காடப்பநல்லூர், பவானி, ஊஞ்சலூர், கொடுமுடி உள்பட பல்வேறு ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக பவானி நகரில் தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பசுவேஸ்வரர் வீதி, பூக்கடை அருகே உள்ள பாலக்கரை மற்றும் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி நகர், காவேரி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பவானி நகரில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு பவானியில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பவானி ஆற்றங்கரையோரம் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பவானியில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது.

5 இடங்களில் முகாம்கள்

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களை சேர்ந்த 1,000 பேர் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று முன்தினத்தை விட நேற்று வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் பவானி மின் மயானத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பிணங்களை எரியூட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து வருகிறார்.

கொடுமுடி

கொடுமுடி காவிரி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் அந்த பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கொடுமுடி இலுப்பை தோப்பு பகுதியில் உள்ள 35 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதேபோல் கொடுமுடி வடக்கு தெரு புதுமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள 7 வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.

இலுப்பை தோப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 171 பேர் மற்றும் வடக்கு தெரு புதுமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 29 பேர் என மொத்தம் 200 பேர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகில் கொளாநல்லி ஊராட்சி சத்திரப்பட்டி கிராமம் காவிரி ஆற்றங்கரையில் உள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சத்திரப்பட்டி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள 30 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி சத்திரப்பட்டி கிராமத்துக்கு சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள், சிறுமிகள், முதியவர்கள், பெண்கள் போன்றவர்களை பரிசல் மூலம் மீட்டு அந்த பகுதியில் உள்ள கோவிலில் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையில் உள்ள மீனவர் குடியிருப்பு, காமராஜர் வீதி, பழைய மாரியம்மன் கோவில் வீதி, பாரதியார் வீதி பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 6 வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மேடான பகுதியில் உள்ள தங்களுடைய உறவினர்களின் வீடுகளுக்கு சென்று பாதுகாப்பாக தங்கினர். இதையொட்டி அந்தியூர் தாசில்தார் அம்மாபேட்டை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல் சிங்கம்பேட்டையை அடுத்த புதுகோட்ரஸ், சித்தார், காடப்பநல்லூர், காட்டூர், காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக புதுகோட்ரஸ் பகுதியில் 6 வீடுகளிலும், காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதியில் 7 வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. மேலும் சிங்கம்பேட்டை ஓடைத்தோட்டம் பகுதியில் 4 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் புதுகோட்ரஸ் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கம்பேட்டையில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமிலும், காட்டூர், காட்டுக்கொட்டாய் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காட்டூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமிலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். சிங்கம்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அங்கிருந்த வருவாய்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

அம்மாபேட்டை அருகே கோம்பூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து பூதப்பாடி, குருவரெட்டியூர், சென்னம்பட்டி உள்ளிட்ட 38 கிராமங்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் சுத்திகரிப்பு செய்து நீரேற்றம் செய்யப்படுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோம்பூர் பள்ளத்தின் வழியாக தண்ணீர் சென்று சுத்திகரிப்பு நிலையத்துக்குள் புகுந்தது. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு