ஈரோடு மாவட்டத்தில் 70 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 474 போலீசார் பணி இடமாறுதல் செய்யப்பட்டனர். அவர்கள் உடனடியாக பொறுப்பேற்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
பணி இடமாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் போலீசாருக்கு பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் நடந்தது. ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் போலீசார் பலர் கலந்துகொண்டு தங்களது விருப்பத்தின்பேரில் போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து பணி இடமாறுதல் பெற்றார்கள்.
அதன்படி மாவட்டம் முழுவதும் 70 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இதேபோல் ஆயுதப்படையில் உள்ள 59 போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
பொறுப்பேற்க உத்தரவு
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள், போலீசார் என மாவட்டத்தில் மொத்தம் 474 பேர் பணி இடமாறுதல் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் சில போலீசார் இடமாற்றம் பெற்ற பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்களால் செல்லாமல் இருந்தனர்.
இந்தநிலையில் இடமாற்றம் பெற்ற போலீசார் தங்களுக்கு நியமிக்கப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக சென்று பொறுப்பேற்று கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.