புதுடெல்லி,
உலகளவில் 2 கோடியே 26 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இவர்களில் இதுவரை 1 கோடியே 45 லட்சத்து 44 ஆயிரத்து 694 பேர் கொரோனாவை வென்று காட்டி வீடு திரும்பி இருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரங்கள் நேற்று மதியம் தெரிவித்தன.
முதல் இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 35.01 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில், 28 லட்சத்து 44 ஆயிரத்து 318 பேர் குணம் அடைந்துள்ளனர்.இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்து 58 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் இந்தியாவில் அதிகபட்சமாக 62 ஆயிரத்து 282 பேர் கொரோனாவை வீழ்த்தி, வெற்றி கண்டு வீடு திரும்பி உள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் 12 ஆயிரத்து 243 பேர் நலம் பெற்றனர். அடுத்து ஆந்திராவில் 8,846 பேர் குணம் அடைந்தனர். கர்நாடகத்தில் 6,341 பேரும், உத்தரபிரதேசத்தில் 5,863 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதற்கு அடுத்த அதிகபட்ச எண்ணிக்கையில் தமிழகம் கூடுதல் நோயாளிகள் குணம் அடைந்து வீடு திரும்பியதை கண்டுள்ளது. குணம் அடைந்தோர் விகிதத்தில் டெல்லி முதல் இடத்தில் (90.10 சதவீதம்) உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் (83.50 சதவீதம்) இருக்கிறது. மூன்றாம் இடத்தை குஜராத் (79.40 சதவீதம்) வகிக்கிறது.
தெலுங்கானாவில் மீட்பு விகிதம் 77.40, ராஜஸ்தானில் 76.80, மேற்கு வங்காளத்தில் 76.50, பீகாரில் 76.30, மத்திய பிரதேதசத்தில் 75.80 சதவீதமாக உள்ளது. 33 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மீட்பு விகிதம் 50 சதவீதத்தை தாண்டி இருப்பது முக்கிய அம்சம் ஆகும்.
அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் தொடர்ந்து மீண்டு வருவதால், அவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. இதன்காரணமாக இந்தியாவில் மீட்பு விகிதம் 74.28 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை இந்தியாவில் 14 லட்சத்து 66 ஆயிரத்து 918 அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 985 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 67 ஆயிரத்து 237 ஆக உள்ளது.