தமிழக செய்திகள்

லோக் அதாலத்தில், 50 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி தகவல்

நாடு முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 50,266 வழக்குகளில் சுமுகதீர்வு காணப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2-வது சனிக்கிழமை நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான முதல் தேசிய லோக் அதாலத் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணப்படுகிறது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் தமிழகத்தில் நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் நீதிபதி கே.ராஜசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

521 அமர்வுகள்

இந்த லோக் அதாலத்தில் காசோலை மோசடி, கடன் உள்ளிட்ட 21 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.கோவிந்தராஜ், சி.வி.கார்த்திகேயன், எம்.தண்டபாணி, சி.சரவணன் ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகளும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, வி.பவானி சுப்பராயன், டி.கிருஷ்ணவள்ளி, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 4 அமர்வுகளும், மாநில சட்டப்பணி ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 18 அமர்வுகளும், மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் தலைமையிலும் மாநிலம் முழுவதும் 521 அமர்வுகள் அமைக்கப்பட்டன.

ரூ.397 கோடி

இந்த அமர்வுகளில் சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டன. அதில், இருதரப்பினரிடமும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் 50,266 வழக்குகளில் சுமுகதீர்வு காணப்பட்டது. இதன்மூலம் 397 கோடியே 60 லட்சத்து 59 ஆயிரத்து 218 ரூபாய் உரியவர்களுக்கு தீர்வுத்தொகையாக கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்