குழித்துறை,
குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் இல்ல திருமண விழா நேற்று மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மார்த்தாண்டத்துக்கு வந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பின்னர், இரவு 7 மணியளவில் அனைவரும் புறப்பட தயாரானார்கள். அப்போது, ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்படுவதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திடீரென சி.எஸ்.ஐ. ஆலயம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில், கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி எம்.எல்.ஏ., வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், கணேசன், காளிமுத்து, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு புறம்பானது. அவர் கட்சியில் பெரிய தலைவர். அகில இந்திய அளவில் பல பொறுப்புகளை வகித்தவர். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை.
இது காங்கிரசுக்கு எதிரான தாக்குதல் மட்டுமின்றி இந்திய ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் ஆகும்.
பா.ஜனதா அரசு சுதந்திர அமைப்புகளான தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., தகவல் உரிமை கேட்கும் அமைப்பு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ்.சின் மறைமுக ஆதரவோடு கையகப்படுத்தி வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை தெரிவிப்பதுடன், கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.