தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் தமிழக நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரி போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

‘சென்னை ஐகோர்ட்டில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரி போராட்டம் நடத்தப்படும்’ என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க.வில் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், வடக்கு மண்டல செயலாளர் ஏ.கே.மூர்த்தி, துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் தமிழரசன் வரவேற்றார்.

பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, பா.ஜ.க.வுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதுணையாக இருப்பது போன்று பா.ம.க.வுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை பலமாக இருக்க வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி கொடுக்கவேண்டும். அநியாயம் எங்கு நடந்தாலும் அங்கு உடனடியாக சென்று சமூக நீதியை நிலை நிறுத்த பா.ம.க. போராடும். சென்னை ஐகோர்ட்டில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

3 இட ஒதுக்கீடு பெற்று தந்த ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ். சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட அவரை போன்ற தலைவர் இனிமேல் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. 8 வழிச்சாலை திட்டத்தை முதலில் ஆதரித்த தி.மு.க. தேர்தலுக்காக அதனை எதிர்த்தது. ஆனால் வாக்குக்காக நாங்கள் ஒரு போதும் போராட்டம் நடத்தியது இல்லை. தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பா.ம.க. போராடி வருகிறது.

எல்லா சமுதாயமும் முன்னேற்றம் அடையவேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். திருமாவளவனுக்கு எங்களை (பா.ம.க.வை) எதிர்த்தால் தான் அரசியல். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டால் தான் தி.மு.க.வுக்கு அரசியல். திருமாவளவனுக்கும், தி.மு.க.வுக்கும் ஜால்ரா போடுவதுதான் கம்யூனிஸ்டுகளின் அரசியல். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், நீட் போன்ற பிரச்சினைகள் உருவாகுவதற்கு தி.மு.க. தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை வருமாறு:-

* சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.

* ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்கவேண்டும்.

* மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் (ஓ.பி.சி.) இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்.

* சுப்ரீம் கோர்ட்டின் மேல்முறையீட்டு கிளையை சென்னையில் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.

* டாக்டர் ராமதாசின் 80-வது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்.

என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்