சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேருபவர்களில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவில் இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்து இருக்கிறது.
இதனை ஆய்வு செய்து சட்டமாக இயற்றுவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த குழுவில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, நீதித்துறை செயலாளர்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜோதி முருகன், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் ஜி.பழனிசாமி ஆகியோர் உறுப்பினராகவும், மருத்துவக்கல்வி இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார் என்று அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த கூட்டத்தின் முதல் கூட்டம் கடந்த 15-ந்தேதி நடந்தது. அதன் பின்னர், 2-வது கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.
அப்போது அதிகாரிகளிடம் ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன், துறைசார்ந்த புள்ளி விவரங்கள் பலவற்றை கேட்டு இருக்கிறார். அதை உடனடியாக தயார் செய்து வழங்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த குழு ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கு என்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் ஒரு அலுவலகமும் அரசால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 23-ந்தேதி முதல் அந்த அலுவலகத்தில் தினமும் ஆய்வுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும், அரசு கொடுத்திருக்கும் கால அவகாசத்துக்குள் அறிக்கையை வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.