சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1944-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி தென்னிந்திய நல உரிமை சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னாளில் இதுவே திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. வருகிற 26-ந்தேதியோடு (நாளை) திராவிடர் கழகம் தொடங்கி 75-வது ஆண்டு நிறைவடைகிறது.
இதையொட்டி முதல் மாநாடு நடந்த அதே சேலத்தில் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டை 27-ந்தேதி (நாளை மறுதினம்) நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். சமூகநீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட திராவிடர் கழக கொள்கைகளை பின்பற்றும் தோழமை கட்சிகளுக்கு மாநாட்டில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதால், அவருக்கு பதிலாக அவருடைய கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள். 1944-ம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் நான் மாணவனாக பங்கேற்றேன். 75-வது ஆண்டு பவள விழா மாநாட்டில் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏந்திய திராவிடர் கழகத்தின் தலைவராக பங்கேற்கிறேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீடு பற்றி விவாதிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது இட ஒதுக்கீட்டை வேரறுக்க வந்த பெரிய ஆபத்தாகும். ஆகவே இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பவள விழா மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் அலட்சியமாக இருக்கக்கூடாது.
இட ஒதுக்கீட்டுக்காக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி விவாதித்தது. இதில் தமிழக அரசு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது? என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி பூங்குன்றன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.