சென்னை,
சேலம் மாவட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வணிகர் முருகேசன் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் காவலர்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. முருகேசன் தாக்கப்படும் காட்சிகள் மனதை பதற வைக்கின்றன.
சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை நிகழ்ந்த ஓராண்டுக்குப் பிறகு அதே நாளில் வணிகர் முருகேசன் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட வணிகர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது கண்டனத்துக்குரிய செயல் ஆகும். மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவலர்களே, மக்களின் உயிரை பறிப்பது எந்தவிதத்தில் நியாயம்.
காவலர்கள் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் இதுவே இறுதியாக இருக்கட்டும். ஏழை-எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை காவலர்கள் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். முருகேசன் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகேசனின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்து வியாபாரிகள் நலச்சங்கம்
இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில், சேலம் ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் போலீஸ் கொடுரமாக தாக்கியதில் முருகேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையை இந்து வியாபாரிகள் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. முருகேசன் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழப்பாடி அருகே முருகேசன் எனும் வாலிபர், காவல்துறை துணை ஆய்வாளர் பெரியசாமி கொடூரமாகத் தாக்கியதில், உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். எளிய மக்கள் மீது அரசே வன்முறையை பாய்ச்சும் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியது.
இவ்விவகாரத்தில் காவல்துறையினரின் தாக்குதலினால் உயிரிழந்த முருகேசனின் கொலைக்கு காரணமான காவல்துறை உதவி ஆய்வாளர் பெரியசாமியை மட்டுமல்லாது அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் துறைரீதியாகவும், சட்டப்படியாகவும் நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை அளிக்க வேண்டும். உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.