சென்னை,
பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு விண்வெளியில் முன்னேறியிருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை. பா.ஜ.க. தேசிய செயலாளரும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான எச்.ராஜாவை பற்றி மிகவும் மட்டமாக, பேசக்கூடாத வார்த்தைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
எச்.ராஜாவை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை மு.க.ஸ்டாலின் முன் வைத்தது கண்டிக்கத்தக்கது. அதற்கு பதிலாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்களின் லட்சணங்களை மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் சொல்லலாம்.
கிருஷ்ண பகவான் குறித்து தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மன்னிப்பு கேட்கவேண்டும்.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 2-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழகம் வருகிறார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதனைதொடர்ந்து சிவகங்கை மற்றும் கோவையில் நடைபெறும் கூட்டங்களிலும் அமித்ஷா பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8-ந்தேதி கோவையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதை சொல்கிறாரோ, அதையே மு.க.ஸ்டாலினும் சொல்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சுய புத்தி கொஞ்சம் கூட இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.