சென்னை,
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், பல மாதங்களாக மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எம்சாண்ட் மணலை தரக்கட்டுப்பாடு செய்து அனுமதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:
குவாரிகளில் மணல் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், வெளிப்படை தன்மையை மேம்படுத்தவும், 28.6.17 அன்று இணையதள மற்றும் செல்லிடை பேசி செயலி சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் பொது மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு நேரம் இல்லாமல் மணலை நேரடியாக பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், 16.8.2017 அன்று காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகைகளில் இயங்கி வந்த அனைத்து மணல் குவாரிகளும் இயங்குவதற்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
எனவே மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க பிற மாவட்டங்களில் உள்ள ஆற்றுப்படுகைகளில் புதிய மணல் குவாரிகளை தொடங்க அனுமதி பெறப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் புதிய மணல் குவாரிகளை தொடங்க கோர்ட்டு தடை விதித்து 29.11.2017 அன்று உத்தரவிடப்பட்டது. மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், தமிழ்நாடு அரசு மணல் தட்டுப்பாட்டை போக்க எம்சாண்ட் மணல் உற்பத்தியை பரிசீலித்து அனுமதி அளித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யவும், பிற மாநிலங்களில் இருந்து மணலை கொண்டு வரவும், அதனை பொதுப்பணித்துறை மூலமாக மட்டுமே விற்பனை செய்யவும் உரிய வரைமுறைகளை வகுத்து ஆணைகளை அரசு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் கட்டுமானத்துக்கு தேவையான மணல் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, 2 பொதுநல வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதனால் தற்காலிக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அரசுக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்த பிறகு தற்போது நிலவிவரும் மணல் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கிவிடும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.