தமிழக செய்திகள்

தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 1 11.2 டிகிரி வெயில் பதிவு

தமிழகத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. நேற்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இன்று (ஞாயிறு) 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் தன்னுடைய முழு ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் கொடுமை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் 10 இடங்களுக்கு மேல் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் நேற்று பதிவாகி இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் 106.7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107.78 டிகிரியும் வெயில் பதிவானது. அதேபோல், கடலூர், மதுரை தெற்கு, விமான நிலையம், நாகப்பட்டினம், கரூர், பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கடலூர், பெரம்பலூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைத்தது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து, தென்மேற்கு காற்று தமிழக பகுதிகளில் வீசும். அதன்பின்னர், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைய தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக இருந்து வருகிறது. தற்போதைய சூழல் வரை, மேற்கு காற்று தான் தமிழக பகுதிகளில் வீசி வருகிறது. அதன் போக்கு மாறி, தென்மேற்கு காற்று உள்ளே வரும்போது, வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் இன்றும் (ஞாயிறு) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், ஓரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் வெப்பம் 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், தென்மேற்கு பருவமழை காலமாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்