தமிழக செய்திகள்

சிறுமி கற்பழிப்பு வழக்கில் சென்னை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு ஜெயில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

சிறுமியை கற்பழித்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ்குமார் (வயது 52). இவர் தற்போது பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வறுமை காரணமாக தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு சில நாட்களில் தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து மகளை அழைத்துச் செல்வதற்காக சிறுமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்த போது, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் சிறுமியின் தாயாரை தொடர்பு கொண்டு, சிறுமி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

இதற்கிடையே பெரம்பலூர் வந்த சிறுமியின் தாயார், ஆஸ்பத்திரியில் மகளை பார்த்தபோது அந்த சிறுமி சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து போனார்.

மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் சிறுமி கற்பழிக் கப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மீது கற்பழிப்பு, கூட்டு சதி, மரணம் ஏற்படும் என்று தெரிந்தே குற்றச்செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவரது நண்பர் ஜெய்சங்கர், பன்னீர்செல்வம் உள்பட 6 பேர் மீது கூட்டு சதி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் போலீசில் சரண் அடைந்தார். மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி ராஜ் குமார் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை பெரம்பலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின் போது பன்னீர்செல்வம் இறந்து போனார். இதனால், அவரது பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.

ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மீது கற்பழிப்பு, கூட்டு சதி, மரணம் ஏற்படும் என்று தெரிந்தே குற்றச்செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி உள்ளன. எனவே, அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஜெய்சங்கர் மீது கூட்டு சதி, ஏமாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி இருக்கின்றன. எனவே அவருக்கு, கூட்டு சதிக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஏமாற்றிய குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். மற்ற 4 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

தீர்ப்பை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரையும், ஜெய்சங்கரையும் போலீசார் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்று, அங்கு அடைத்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் நேற்று கோர்ட்டுக்கு வந்த போது அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டதும் ராஜ்குமார் சோகமானார். அவரை பார்த்து, அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்