சென்னை,
தமிழகத்தை உலுக்கிய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை முதலில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். முதலில் வழக்குப்பதிவு செய்ததும் அவர்கள் தான். இந்த வழக்கை அவர்கள் சரியாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. போலீசார் விசாரணை தொடங்கியதும் தனியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்தனர். அதன்பிறகு இந்த வழக்கில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் சென்னை நகர போலீஸ் கமிஷனரும், டி.ஜி.பி.யுமான ஜார்ஜ், தற்போதைய போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதே நேரம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டு அடுத்தகட்ட விசாரணையை தொடங்கினர்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
3-வது முறையாக அனுப்பிய சம்மனை ஏற்று சரவணன் நேற்று காலை 8 மணிக்கு சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். எனினும், அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 10 மணிக்கு மேல்தான் விசாரணையை தொடங்கினர்.
குட்கா ஊழல் தொடர்பாக அடுக்கடுக்கான கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சரவணனை திணறடித்ததாக தெரிகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் விசாரணை முடிந்தது. சுமார் 7 மணி நேர விசாரணைக்கு பிறகு சரவணன் சி.பி.ஐ. அலுவலகத்தின் பின்பக்க வாசல் வழியாக சென்றுவிட்டார். அவர் வேறு சட்டை அணிந்து சென்றதாக தெரிகிறது.
இதனால் அவரை புகைப்படம் எடுக்க முடியாமல் புகைப்படக்காரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்பக்க வாசல் வழியாக வந்த சரவணனின் வக்கீல் விசாரணை முடிவடைந்து விட்டதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அடுத்த கட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.