தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட நித்யானந்தா

மதுரை ஆதீனம் என தன்னை குறிப்பிட்டதற்காக சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா மன்னிப்பு கேட்டார்.

தினத்தந்தி

சென்னை,

மதுரை ஆதீனத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில், மதுரையை சேர்ந்த ஜெகதலபிரதாபன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது.

பின்னர் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது நித்யானந்தா சார்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி. 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் இளைய ஆதீனமாகவே தொடர்வார். அந்த நியமனத்தை எவராலும் ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 292-வது ஆதீனம் இருக்கும் போது, 293-வது ஆதீனம் என்று எப்படி குறிப்பிட முடியும்? என்றும் ஐகோர்ட்டு கேள்வி கேட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு கடந்த மாதம் 29-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். பதில் மனுவை தாக்கல் செய்யாமல், இழுத்தடித்தால் நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூறியிருப்பதாவது:-

தடையை நீக்கக்கோரி நான் தாக்கல் செய்த மனுவில், என்னை 293-வது குரு மகாசன்னிதானம் என்று குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக, 292-வது குரு மகாசன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளார்.

எனவே என்னை 293-வது குரு மகாசன்னிதானமாக எங்கெல்லாம் குறிப்பிட்டுள்ளேனோ, அவற்றை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். குரு மகாசன்னிதானமாக குறிப்பிட்டதற்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து நீதிபதி, மதுரை ஆதீனம் தொடர்பாக மதுரை சிவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவுக்கு வரும் வரை, மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய மாட்டேன் என்று நித்யானந்தா உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால், அதனை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படும். அல்லது இந்த வழக்கை எதிர்கொள்கிறேன் என கூறினால், வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு அதன் பிறகு தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து நித்யானந்தாவிடம் கேட்டு தெரிவிப்பதாக அவரது வக்கீல் கூறினார். இதையடுத்து விசாரணையை 26-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

வழக்கு விசாரணையின்போது, திருஞானசம்பந்தர் பாடிய பாடலை மேற்கோள் காட்டி மதுரை ஆதீனம் மடத்துக்கே இந்த நிலையா? என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்