சென்னை,
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியல் கட்சி தொடங்கி, மிகக்குறுகிய காலத்தில் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த வரலாற்றுச் சாதனையைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது நிகழ்த்தியுள்ளார். இது இந்திய அரசியலில் எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகிய ஆளுமைகள் ஏற்படுத்திய வரலாற்று மாற்றத்திற்கு இணையானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்த வரலாற்றை இந்தியாவிலேயே முதன்முதலாகப் படைத்தவர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 1972 அக். 17 அன்று அதிமுகவைத் தொடங்கினார். சுமார் 56 மாதங்கள் (4 ஆண்டுகள் 8 மாதங்கள்) காத்திருந்து, 1977-ல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்தார். 1987-ல் அவர் மறையும் வரை தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்-அமைச்சராகத் திகழ்ந்தார்.
ஆந்திர திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய இவர், எம்.ஜி.ஆரை விடவும் வேகமான அரசியல் வெற்றியைப் பதிவு செய்தவர். 1982 மார்ச் 29 அன்று தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த 9 மாதங்களிலேயே (1983 ஜனவரி) மாபெரும் வெற்றி பெற்று, ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்-அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது நடந்து முடிந்துள்ள 17-வது தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலேயே பெரும் முத்திரை பதித்துள்ளார். எம்.ஜி.ஆர் எப்படி திமுகவில் இருந்து பிரிந்து வந்து ஒரு மிகப்பெரிய அரசியல் பிளவை ஏற்படுத்தினாரோ, அதேபோலத் தமிழகத்தில் தற்போதுள்ள திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தகர்த்து விஜய் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு சினிமா நட்சத்திரம் இவ்வளவு குறுகிய காலத்தில் மாநில அளவில் மிகப்பெரிய வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தி, முதல் தேர்தலிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதல்முறை. என்.டி.ஆர் ஆந்திராவில் சாதித்த அந்த மின்னல் வேக வெற்றியைப் போல, விஜய்யின் இந்த எழுச்சியும் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.