சென்னை,
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
ஒடிசா மாநிலம் முதல் தென் தமிழகம் வரை நிலப்பரப்பின் மேலே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
தமிழகத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில்(கன்னியாகுமரி மாவட்டம்) 10 சென்டி மீட்டர் மழையும், ஏற்காடு(சேலம்) தாராபுரம்(திருப்பூர்), வால்பாறை(கோவை) ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை அளவும் பதிவாகி உள்ளது. குன்னூர்(நீலகிரி), போளூர்(திருவண்ணாமலை), திருப்பூர், உடுமலைப்பேட்டை(திருப்பூர்) ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை அளவும், காங்கேயம்(திருப்பூர்), கொடைக்கானல்(திண்டுக்கல்), இரணியல்(கன்னியாகுமரி), பெரியகுளம்(தேனி), கே.பிரிட்ஜ்(நீலகிரி), பவானிசாகர், சத்தியமங்கலம்(ஈரோடு) ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை அளவும் பதிவாகி உள்ளது.
இது தவிர, கோபிச்செட்டிப்பாளையம்(ஈரோடு), மேட்டுப்பாளையம்(கோவை), மணமேல்குடி(புதுக்கோட்டை), நாமக்கல், கொல்லிமலை(நாமக்கல்), அதிராமப்பட்டினம்(தஞ்சாவூர்) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.