தமிழக செய்திகள்

சிறுமி கொலை வழக்கில் வாலிபருக்கு விதித்த தூக்கு தண்டனை ரத்து, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சிறுமி கொலை வழக்கில் வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்தும், இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவரது மனைவி உஷா. இவர்களது மகள்கள் பச்சையம்மாள் (வயது 4), விஜயலட்சுமி (2). பச்சையம்மாள் மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த 2013-ம்ஆண்டு ஜூன் 10-ந்தேதி பள்ளிக்கு சென்ற பச்சையம்மாள் திடீரென மாயமானாள். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இந்தநிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பக்கத்து கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி பச்சையம்மாள் பிணமாக மிதந்தாள். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர், பரமசிவத்துடன் இருந்து வந்த பணத்தகராறு காரணமாக, பச்சையம்மாளை கடத்தி கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி மகிழேந்தி, மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை உறுதிசெய்ய, சென்னை ஐகோர்ட்டுக்கு அனைத்து ஆவணங்களையும், கீழ் கோர்ட்டு அனுப்பிவைத்தது. இதையடுத்து கீழ் கோர்ட்டு வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து, ஐகோர்ட்டில் மணிகண்டன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்து, நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். அதில், நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

இந்த 4 வயது சிறுமி எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? என்பதை அரசு தரப்பு முக்கிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை. சிறுமி மாயமானது தொடர்பாக ஒரு வழக்கும், கொலை செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்ற சம்பவத்திற்கு 2 வழக்குகள் பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த வழக்கில், கண்ணால் பார்த்ததாக கூறப்படும் சாட்சிகளும், பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர். அந்த சிறுமி கொலை செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அதற்காக குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படாத ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையான, தூக்கு தண்டனை விதிக்க முடியாது.

ஒருவேளை இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டால், தவறான தண்டனையை நீதிமன்றம் வழங்கியதாகிவிடும். இதுபோல அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு முன்பு கீழமை நீதிமன்றங்கள் கவனமாக செயல்பட வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என்கிறபோது எப்படி தூக்கு தண்டனை வழங்க முடியும்?

எனவே, இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. தற்போது சிறுமிகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி, சரியாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தூக்கு தண்டனையை குற்றவாளிக்கு வழங்க முடியும்.

எனவே தூக்குத்தண்டனை விதித்து கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்கிறோம். அதேநேரம் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுகிறோம். ஒருவேளை சி.பி.ஐ., விசாரணையில் இந்த வாலிபர்தான் அந்தக்கொலையை செய்துள்ளார் என்பது நிரூபணமானால், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை