சென்னை,
அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.
சென்னை ஐகோர்ட்டில், ரமணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. போதுமான ஆசிரியர்கள், கட்டிடம், அடிப்படை வசதிகள், காற்றோட்டமான சூழல் ஆகியவை இல்லாமல் அந்த பள்ளிகள் செயல்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்படும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அந்த பள்ளிகள் மீது நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 30 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.